தண்ணீர் தேசம் ஸ்விட்சர்லாந்து - Paradise Never Lost - Part 1

ஐந்து வருட போராட்டத்திற்கு பின் அப்பாவை ஐரோப்பா அழைத்து வந்திருக்கிறேன். அமைதியான லக்சம்பர்க் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி சுற்றுலா சென்றோம். அப்போது  "எப்படி எல்லா இடமும் இங்கு பசுமையாகவே இருக்கிறது? ஐரோப்பா முழுவதும் வறட்சி என்பதே கிடையாதா?" என்று கேட்டார். மேற்கு மற்றும் தெற்கு ஐரோப்பா கொஞ்சம் வறட்சியான பூமிதான், ஆனால் லக்சம்பர்க் தேசத்தையே கொஞ்சம் காய்ந்த பூமிபோல் தோற்றம் அளிக்க செய்யும் மற்றொரு  தேசம் இருக்கிறது - சீக்கிரம் செல்வோம்!! என்று சொல்லிவிட்டு "ஸ்டார்ட் மியூசிக்"


பலமுறை பல்வேறு தருணங்களில் ஸ்விட்சர்லாந்து சென்றிருந்தாலும் அவை வழக்கமான இந்திய முறை சுற்றுலா பயணனங்களாகவே இருந்திருக்கின்றன. அது என்ன இந்திய முறை?

  • இரண்டு மூன்று நாட்களுக்குள் சுற்றுலாவை முடித்துவிடுவது (தங்கும் செலவை மிச்சமாக்க)
  • முக்கியமான இடங்களுக்கு மட்டும் சென்று அதன் முன்னால் போட்டோ மட்டும் எடுத்துக்கொண்டு அந்த இடங்கள் தரும் பரவசத்தை அனுபவிக்க மறப்பது (நானும் பாரீஸ் சென்றேன் என்று ஈபில்டவர் முன்பும் லூவர் மியுசியம் முன்பும் அவசரம் அவசரமாக புகைப்படம் எடுத்துக்கொண்டு  திரும்பி வந்தவர்கள் எத்தனை பேர்?. ஒழுங்காக திட்டமிட்டால்  பாரிஸை மட்டும் ஒரு சாதாரண சுற்றுலா பயணி ஒரு வாரம் நன்கு அனுபவிக்க முடியும். கலைக்கண்(ஹி ஹி) இருந்தால் கணக்கே இல்லை)
  • வீட்டில் இருந்து சோத்து மூட்டையை முடிந்த வரை தூக்கி செல்வது
சுற்றுலாவை அனுபவிக்க வேண்டிய விஷயத்தில் ஐரோப்பியர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. நிதானமாக வாரக்கணக்கில் அனுபவிப்பார்கள். ஆனால் பக்காவாக பிளான் பண்ணி அனுபவிப்பார்கள் அதனால் செலவு கணிசமாக குறையும்.  நான் ஸ்விசில் மூன்று வருடம் வேலை செய்திருப்பதால் ஒரு விஷயம் நன்றாக தெரியும். ஐரோப்பாவில் காசு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய இடங்களில் மிக முக்கியமாக இருக்க வேண்டிய நாடு ஸ்விஸ். லக்சம்பர்க் ஒரு expensive நாடு என்பதால் பெல்ஜியம், பிரான்சு மற்றும் ஜெர்மனியில் தங்கிக்கொண்டு லக்சம்பர்கில் வேலை பார்க்கும் ஐரோப்பியர்கள் பல பேர். ஆனால் லக்சம்பர்க் நாட்டினரே "Bloody Expensive country" என்று புலம்பும் அளவிற்கு செலவு வைக்ககூடிய ஒரு நாடு சுவிஸ். ஒரு சின்ன உதாரணம்
  • ஒரு சாதாரண Croissant எனப்படும் காலை உணவான பன் பிரான்சில் ஒரு யுரோ, லக்சம்பர்கில் ஒன்றரை யுரோ, சுவிட்சர்லாந்தில் ரென்றரை பிரான்க்(ரென்றரை யூரோ இப்பொழுதைய மதிப்பில்)
  • ஒரு Mid Range உணவகத்தில் பிட்சா ஜெர்மனியில் எட்டு-பத்து யுரோ, லக்சம்பர்கில் 12 யுரோ, சுவிட்சர்லாந்தில் 25  பிரான்க்.
  • ஒரு சாதாரண தமிழ் திருட்டு டிவிடி பாரிசில் 1 யுரோ, சுவிஸில் 5 பிரான்க் :D
ஆகவே இந்த விஷயங்களை பிளான் பண்ணுவதற்கு முன் முன்னிறுத்தி கொண்டேன்.
  • சுற்றுலா செல்வது மனதுக்கும் உடலுகும் புத்துணர்ச்சி கொடுப்பதற்கு. அவசரமாக சுற்றி அலுப்படைந்துவிடக்கூடாது. அதனால் ஒரு வாரம் பிளான் செய்யவேண்டும்.
  • குழந்தைகளுடன் செல்வதால் ஒரு நாளைக்கு ஒரு இடம் மட்டுமே சுற்றி பார்க்க வேண்டும். கொஞ்ச இடங்கள் பார்த்தாலும் திருப்தியாக பார்க்க வேண்டும்.
  • குழந்தைகள் உணவு முக்கியம் என்பதால் தங்குமிடம் சாதாரண ஹோட்டல் போல் இல்லாமல் "Apart Hotel" போல் இருக்க வேண்டும் (கிச்சன் வசதியோடு).
  • ஒரு இடத்தில் தங்கிக்கொண்டு முக்கியமான இடங்களுக்கு செல்ல வேண்டும். அதிலும் ஒரு பனிமலைக்கு கட்டாயம் செல்ல வேண்டும் (என் அப்பா அதுவரை பனியை பார்த்ததில்லை). 
  • சுவிஸில் பல்வேறு பனி மலைகள் இருந்தாலும் அவை Ski எனப்படும் பனிச்சறுக்கு விளையாட்டுக்கு பொருத்தமான இடங்களாகவும் அல்லது பிராணவாயு குறைவான உயரமான இடங்களாகவும் இருந்தன. ஏற்கனவே Zermatt மலைக்கு சென்றிருக்கிறேன் ஆனால் அது பதினான்காயிரம் அடி உயரம். குழந்தைகளுடனும் வயதானவர்களுடனும் செல்லும்பொழுது கோடை காலத்திலும் பனி உள்ள, அதே சமயம் உயரம் குறைவான மலை, மற்றும் சிறுவர்களுக்கான பனிச்சறுக்கு(Sledging) அமைப்போடு உள்ள இடம் எது என்று பார்த்ததில் பத்தாயிரம் அடி உள்ள "Titlis" சரியான இடம் என்று நண்பர்கள் பரிந்துரைத்தனர்.  
  • Titlis மலையை மனதில் இருத்திக்கொண்டு தங்கும் இடங்களை முடிவு செய்தல் மூன்று இடங்கள் சரியானவையாக தோன்றின. ஜூரிச்(Zurich), லுசர்ன்(Lucerne) மற்றும் இன்டர்லாகன்(Interlaken). எனக்கு லுசர்ன் ஏரிக்கரை ஓரமாகவே ஒரு நல்ல அப்பார்ட்மெண்ட் 30% சலுகை விலையில் கிடைத்தது.  உட்டோரிங் அப்பார்ட்மெண்ட் முகவரி (என்ன பார்கிங் தான் பர்ஸை பதம் பார்த்து விட்டது - ஒரு வாரத்திற்கு 110 பிரான்க்)
ஒருவாரம் பிளான் பின்வருமாறு போட்டேன்

முதல் நாள்(சனி): ஜெர்மனி வழியாக காரில் லுசர்ன் பயணம். வழியில் ரைன் அருவி
மூன்றாம் நாள்(திங்கள்): குளிருக்கு கொஞ்சம் பழக  5899 அடி உயர ரிகி மலை
நான்காம் நாள்(செவ்வாய்): அதிக குளிருக்கு பழக 6982 அடி உயர பிளாடஸ் மலை
ஐந்தாம் நாள்(புதன்): கடுங்குளிரிருக்கும் 10623 அடி உயர டிட்லிஸ் பனி மலை.
ஆறாம் நாள்(வியாழன்): Contingency day (குழந்தைகளுக்கு உடம்பு சரி இல்லாமல் போனால் அல்லது உடம்புக்கு ஓய்வு தேவைபட்டால்).
ஏழாம் நாள்(வெள்ளி): இன்டர்லகேன் ரயில் பயணம் Golden Pass Panoramic Line
எட்டாம் நாள்(சனி): லுசர்னில் இருந்து லக்சம்பர்க் கார் பயணம். வழியில் இயற்கை எழில் கொஞ்சும் ஜெர்மனியின் "Black Forest" மற்றும் "ஒரிஜினல் Black Forrest Cakeஐ" சுவைப்பது.
 

நண்பர்களிடம் செலவை பற்றி விசாரித்ததில் கேபிள் கார் மிகுந்த செலவு வைக்கும் போல் இருந்தது. உதாரணம்: Titlis மலை உச்சிக்கு செல்வதற்கு கேபிள் கார் மட்டும் 90 பிரான்க். நாங்கள் இருக்க போவது ஒரு வாரம் என்பதால் ஒரு ஒரு இடமும் பர்ஸை பலமாக பதம் பார்க்கும் போல் இருந்தது. ஆகவே Trip Advisorஐ நோண்டியதில் இந்த அருமையான பாஸ் பற்றி தெரிந்தது - "Tell Pass". ஐந்து நாட்களுக்கு மத்திய சுவிஸை முழுவதும் சுற்றிப்பார்க்க 230 பிரான்க் மட்டுமே (இது சொகுசு கப்பல், ரயில், மலை ரயில்(Cogwheel),பேருந்து, கேபிள் கார் அனைத்தும் அடங்கியது). அடி தூள் கெளப்பு என்று கிளப்பிக்கொண்டு சுவிஸ் பயணம் ஆரம்பம்...... 

Comments

  1. அடே டே.. போன மாதம் தான் நானும் சுவிஸ் போய் இருந்தேன். தண்ணீர் தேசமே தான். நானுன் என் ஐரோப்பிய பயனத்த பற்றி சில பதிவுகள் போட்டேன். உங்கள் பதிவுகளையும் படிக்க ஆவலாய் உள்ளேன்,.

    ReplyDelete
  2. நானும் சுவிஸ் வந்து பார்த்தேன் தாங்கள் சொன்ன இந்திய முறைப்படி!

    ReplyDelete
  3. @புலவர் இராமாநுசம்: உண்மை ஐயா. தொண்ணுறு சதவிகிதம் இந்திய பயணங்கள் அப்படித்தான் நடக்கின்றன. ஆனால் முறைப்படி திட்டமிட்டால் அதே செலவுக்கு இருமடங்கு நாட்கள் பொறுமையாக சுற்றி பார்க்க முடியும் என்பது இப்பொழுதுதான் புலனாகிறது.

    ReplyDelete
  4. @விசுAWESOME: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :) சீக்கிரம் அடுத்த பதிவை போடுகிறேன். உங்கள் அனுபவங்களும் நன்றாக இருந்தன.

    ReplyDelete

Post a Comment